ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சுபாங் ஜெயா, ஆலய வளாகத்தில் 20,000 வெள்ளி செலவில் மேம்பாட்டுப் பணிகள்- தொகுதி உறுப்பினர் மிஷல் இங் தகவல்

 

 

சுபாங் ஜெயா, மே -1,சுபாங் ஜெயாவிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம், குருத்வாரா சாகிப் சீக்கிய ஆலயம் மற்றும் பௌத்த ஆலயத்தை உள்ளடக்கிய வளாகத்தில் 19,996 வெள்ளி செலவில் இரு  மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த மூன்று வழிபாட்டுத் தலங்களுக்கும் வரும் பக்தர்களின் வசதிக்காக கார் நிறுத்துமிடம் செல்லும் படிக்கட்டுகளைத் தரம் உயர்த்துவது மற்றும் சோலார் எனப்படும் சூரிய ஒளியீர்ப்பு விளக்குகளைப் பொருத்துவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக சுபாங் ஜெயா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இயோ கூறினார்.

கார் நிறுத்துமிடத்திலிருந்து ஆலயத்திற்கு செல்லும் வழியில் உள்ள படிக்கட்டுகள் ஒரு கைப்பிடியை மட்டும் கொண்டிருந்ததோடு படடிக்கட்டுகளின் அளவும் சீரற்றதாக இருந்தது. அதே சமயம் விளக்கு இல்லாத காரணத்தால் இரவு வேளைகளில் பக்தர்களுக்கு குறிப்பாக சிறார்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

இப்பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாக அப்படிக்கட்டுகள் ஒரே அளவைக் கொண்டிருக்கும் வகையில் சீரமைக்கப்பட்டதோடு இரு கைப்பிடிகளும் பொருத்தப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அப்பகுதியில் சூரிய ஒளியில் எரியக்கூடிய ஆறு விளக்குகளும் பொருத்தப்பட்டதாக கூறிய அவர், இந்த வசதிகள்  ஆலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு சௌகர்யத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கும் என்றும் கூறினார்.

மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் அந்த பகுதி புதர்கள் மண்டிக் காணப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், கோத்தோங் ரோயோங் எனப்படும் துப்புரவு இயக்கம் மூலம் அப்பகுதியை சுத்தம் செய்ய குருத்வாரா சாகிப், பௌத்த ஆலயம் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் ஆகிய மூன்று ஆலய நிர்வாகத்தினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக   மிஷல் இங் சொன்னார்.


Pengarang :