ECONOMYSELANGOR

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி பெற நாளை முதல்  பதிவு செய்யலாம்

கோலாலம்பூர், மே 1- அஸ்ட்ரேஸேனேகா தடுப்பூசியைப் பெற விரும்பும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர்வாசிகள்   நாளை முதல் பதிவு செய்யலாம்.

முதலில் வருவோருக்கு  முன்னுரிமை என்ற அடிப்படையிலான இந்த முன் பதிவு நடவடிக்கை  நாளை பிற்பகலில்  தொடங்கும் என்று கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

ஆர்வம் உள்ளோர் தடுப்பூசியைப் பெறுவதற்கான தேதி மற்றும் இடத்தை குறிப்பிட்டு http://vaksincovid.gov.my  எனும் அகப்பக்கத்தின் வாயிலாக பதிவு செய்யலாம் என்று அவர் சொன்னார்.

இந்த தடுப்பூசித் திட்டத்திற்கான முதலாவது முன்பதிவு சந்திப்பு நிகழ்வு  வரும் மே மாதம் 5ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகம், மலேசிய தேசிய பல்கலைக்கழகம், புத்ரா உலக வாணிக மையம், ஷா ஆலம் ஐ.டி.சி.சி மாநாட்டு மையம் ஆகிய இடங்களில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையங்களில் நடைபெறும் என்று அவர் சொன்னார்.

தடுப்பூசி பெறுவதற்கான நேரம் மற்றும் இடத்தை மேற்கண்ட அகப்பக்கம் வாயிலாக  பதிவு  செய்தப் பின்னர் மைசெஜாத்ரா செயலி மற்றும் குறுந்தகவல் மூலம் நீங்கள் தகவல் பெறுவீர்கள். இதுதான் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியைப் பெறுவதற்கான வழிமுறையாகும் என்றார் அவர்.

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியைப் பெறுவதற்கான முன்பதிவை குறிப்பிட்ட சில மருத்துவமனைகள் பெறுவதாக  வெளி வந்த தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 268,000 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிடடார்.

 


Pengarang :