ALAM SEKITAR & CUACASELANGOR

சிலாங்கூரில் 1,278 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- எழுவர் மரணம்

ஷா ஆலம், மே 9– சிலாங்கூர் மாநிலத்தில் இன்று 1,278 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. நேற்று பதிவான 1,722 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும்.

மாநிலத்தில் இன்று பதிவான சம்பவங்களில் 968 நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மூலம் பரவியவை என்று சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ  டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இவற்றில் 84 சம்பவங்கள் தொற்று மையங்கள் மூலம் உருவானவை. மூன்று இறக்குமதி சம்பவங்களாகும். எஞ்சியவை இதர பரிசோதனை நடவடிக்கைகள் மூலம் கண்டறியப்பட்டன என்றார் அவர்.

கோம்பாக், ஜாலான் சத்து  தொற்று மையம், கோல லங்காட், ரோரோங் தியுங் தொற்று மையம் மற்றும் கிள்ளான் தொற்று மையம் ஆகியவை இன்று கண்டறியப்பட்டதாக கூறிய அவர், அவை அனைத்தும் வேலையிடங்கள் சம்பந்தப்பட்டவை என்றார்.

இதனிடையே, இந்நோய்த் தொற்றுக்கு மூன்று ஆண்கள், நான்கு பெண்களை உள்ளடக்கிய ஏழு மரணச் சம்பவங்கள் பதிவானதாகவும் 49 முதல் 83 வயது  வரையிலான அந்த உள்நாட்டினர் கடுமையான நோய்ப் பின்னணியைக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று மாநிலத்தில் 1,080 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதாக மாநில சுகாதாரத் துறை கூறியது. இதுவரை 138,172 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.


Pengarang :