ECONOMYHEALTHSELANGOR

44 சட்டமன்ற தொகுதியிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை தொடரும்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், மே 20- கோவிட்-19 நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநிலத்தில் உள்ள எஞ்சிய 44 சட்டமன்ற தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதுவரை மாநிலத்தில் உள்ள 12 தொகுதிகளில் இத்தகைய இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நடத்தப்பட்டுவிட்டதாக அவர் சொன்னார்.

இதற்கு முன்னர் மாநில சுகாதாரத் துறை மற்றும் செலங்கா செயலி வாயிலாக அடையாளம் காணப்பட்ட நோய்த் தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே இந்த இலவச பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

ஆயினும், சட்டமன்ற தொகுதி ரீதியாக நடத்தப்படும் இந்த பரிசோதனை இயக்கத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதோடு பரிசோதனையில் பங்கு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்று கோம்பாக் செத்தியா தொகுதியில் நடைபெற்ற பரிசோதனை இயக்கத்தில் சுமார் 2,000 பேர் கலந்து கொண்டனர் என்றார் அவர்.

இதுபோன்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கங்களில் பங்கு கொள்வதன் மூலம்  அந்த பெருந்தொற்றுக்கு எதிராக அரசு நடத்தும் போராட்டத்தில் பொதுமக்களும் துணை நிற்பதை உணர முடிகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கும் முயற்சியாக இம்மாதம் 8 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை தினசரி இரண்டு தொகுதிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மாநில அரசு நடத்தி வருகிறது.

Pengarang :