ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 -தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 58 விழுக்காட்டினர் இரத்த அழுத்த நோயாளிகள் 

ஷா ஆலம், மே 21– தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகளில் 58.3 விழுக்காட்டினர் உயர் இரத்த அழுத்தப் பிரச்னையை எதிர்நோக்கியவர்கள் என்ற சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அவர்களில் ஏறக்குறைய பாதி பேருக்கு செயற்கை சுவாசக் கருவி தேவைப்படுவதை தரவுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.

ஆகவே, கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் உயர் இரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்துவது மிக அவசியமாகும் என்று அவர் சொன்னார்.

நீரிழிவு மற்றும் இருதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளைக் கொண்டவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்று கடுமையான விளைவுகளை உண்டாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருதய நோய், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் திடீர் மரணம் சம்பவிப்புக்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாக உள்ளதாக  அவர் மேலும் கூறினார்.

பதினெட்டு வயதுக்கும் மேற்பட்ட 64 லட்சம் மலேசியர்கள் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை 2019ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதார ஆய்வு காட்டுவதாக அவர் சொன்னார்.

இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், அவர்களில்  50 விழுக்காட்டினர் தாங்கள் உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை உணராமலிருக்கின்றனர் என்று நோர் ஹிஷாம் கூறினார்.


Pengarang :