ANTARABANGSASELANGOR

பெஞ்சாலா ஆற்றோரம் மண் அரிப்பைத் தடுக்க  3 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், மே 26– கூட்டரசு நெடுஞ்சாலை அருகே பெஞ்சாலா ஆற்றின் ஆறு இடங்களில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பைத் தடுப்பதற்காக சிலாங்கூர் மாநில அரசு மூன்று கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்துள்ளது.

மண் அரிப்பைத் தடுப்பது தொடர்பான ஆய்வு மற்றும் வடிவமைப்பு பணிகள் முற்றுப் பெற்றவுடன்  கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகும் என்று அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர்  இஷாம் ஹஷிம் கூறினார்.

அடிக்கடி வெள்ளப் பிரச்னையை எதிர்நோக்கி வரும் கிள்ளான் மற்றும் ஷா ஆலம் வட்டாரத்தில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிள்ளான், தாமான் ரஸ்னாவில் உள்ள கிரீஸ் நினைவுச்சின்னம் அருகே சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டவுடன் அந்த குடியிருப்பு பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மேலும், பத்து தீகா, கம்போங் கெபுன் பூங்கா, ஆகிய பகுதிகளில்  ஏற்படும் வெள்ளப் பிரச்னைக்கான காரணமும் அடையாளம் காணப்பட்டு விட்டது என்றார் அவர்.

முன்னதாக அவர், வெள்ளப் பிரச்னையை அடிக்கடி எதிர்நோக்கி வரும் அப்பகுதிகளுக்கு வருகை புரிந்தார்.

இதுதவிர சுங்கை பெஞ்சாலா  ஆற்றின் நெடுக ஆறு இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களையும் அவர் பார்வையிட்டார்.

கிள்ளான், தாமான் முத்தியாரா, சிப்பாங் சுங்கை லாபு, டாமன்சாரா, சுங்கை ரும்புட் ஆகிய பகுதிகளில் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், வெள்ள நீர் சேகரிப்பு குளங்கள் மற்றும் வடிகால் சீரமைப்பு ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் அவர் சொன்னார்.

 


Pengarang :