ANTARABANGSAECONOMYHEALTHNATIONAL

வியட்னாம் நாட்டின் புதிய வகை கலப்பின நோய்த் தொற்று மலேசியாவில் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

புத்ரா ஜெயா, மே 31– வியட்னாம் நாட்டில் தற்போது கணடுபிடிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து நோய்த் தொற்று வகைகளின் கலப்பில் உருவான புதிய வகை கோவிட்-19 நோய் மலேசியா உள்ளட்ட இதர நாடுகளில் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அந்த புதிய வகை கலப்பின நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஆபத்து மிகுந்த நோய்த் தொற்றைக் கொண்டிருக்கும் நாடுகளிலிருந்து வருவோர் மீதான கோவிட்-19 பரிசோதனையை சுகாதார அமைச்சு கடுமையாக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து நோய்த் தொற்றின் கலப்பின வகை வியட்னாமில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலேசியா உள்ளிட்ட இதர நாடுகளில் அந்த புதிய வகை நோய்த் தொற்று இன்னும் கண்டறியப்படவில்லை. அந்த புதிய வகை நோய்த் தொற்று நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்காக எல்லைகளில் சோதனைகளை கடுமையாக்கியுள்ளோம் என்றார் அவர்.

நேற்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தங்கள் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய வகை நோய்த் தொற்று, இங்கிலாந்தில் தோன்றி இந்தியாவில் உருமாற்றம் கண்ட ஆபத்துமிக்க புதிய வகை நோய்த் தொற்றின் கலப்பினம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வியட்னாம் நாட்டின் சுகாதார அமைச்சர் இங்குயேன் தான் லோங் கூறியிருந்தார்.


Pengarang :