ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

மலேசிய வான் எல்லையில் ஊடுருவல்- சீனாவுக்கு ஆட்சேப குறிப்பு அனுப்பப்படும்

கோலாலம்பூர், ஜூன் 2- மலேசிய வான்வெளியில்  சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததை கண்டிக்கும் வகையில் மலேசிய அரசாங்கம் அந்நாட்டிற்கு அரச தந்திர ரீதியிலான ஆட்சேப குறிப்பை அனுப்பும்

மேலும், அந்த அத்துமீறல் குறித்து விளக்கம் கோருவதற்காக மலேசியாவுக்கான சீன தூதரை தமது அமைச்சு அழைக்கும் என்று வெளியுறவு  அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் கூறினார்.

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின 16 போர் விமானங்கள் மலேசிய எல்லையில் நுழைந்ததோடு நாட்டின் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது தொடர்பில் அந்நாட்டிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் என்று அவர் சொன்னார்.

மலேசியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. பிற நாடுகளுடன் நட்புறவான அரச தந்திர உறவுகளை கொண்டிருப்பதால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்திலும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிப்போம் என்று பொருள்படாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

நாட்டின் கௌரவத்தையும் இறையாண்மையையும் கட்டிக்காப்பதில் நாம் எப்போதும் உறுதியான நிலைப்பாட்டினை கொண்டிருப்போம் என்றார் அவர்.

இவ்விவகாரம் தொடர்பான மலேசியாவின் ஆழ்ந்த கவலையை  தாம் சீன நாட்டு வெளியுறவு அமைச்சரிடம் எடுத்துரைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பட்டார்.

சீன நாட்டின் 16 போர் விமானங்கள் நேற்று  மலேசிய கடல் மண்டலத்திற்கு மிக அருகே பறந்ததை அரச மலேசிய ஆகாயப்படை கண்டு பிடித்ததாக  ஆகாயப்படை தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ அக்பால் அப்துல் சமாட் கூறியிருந்தார்.


Pengarang :