ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் அரசு வாங்கும் தடுப்பூசி பத்து லட்சம் பேருக்கு செலுத்தப்படும்

சபாக் பெர்ணம், ஜூன் 3–  சிலாங்கூர் மாநில அரசினால் வாங்கப்படும் தடுப்பூசி மூலம் சுமார் பத்து லட்சம் பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி கொள்முதல் மற்றும் அதனை செலுத்துவது தொடர்பான வழி முறைகள் வரும் செவ்வாய்க்கிழமையன்று அறிவிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாம் சொந்தமாக வாங்கும் தடுப்பூசி மூலம் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான உதவித் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடும் போது இந்த தடுப்பூசி திட்டத்தின் ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து எடுத்துரைப்பேன் என்றார் அவர்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் படுத்தப்பட்ட சபாக் பெர்ணம் பகுதிக்கு வருகை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசியை வாங்குவது தொடர்பான முழு தகவல்களும் கிடைக்கப்பெற்றப் பின்னர் அடுத்தக் கட்டத் நடவடிக்கை தொடர்பில் மாநில அரசும் சம்பந்தப்பட்ட அமைச்சும் பேச்சு நடத்தும் என்று அவர் விளக்கினார்.

சிலாங்கூர் மாநில அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசியைச்  பொதுமக்களுக்கு செலுத்துவது தொடர்பில் அமைச்சர் கைரி  ஜமாலுடின் மற்றும் அமைச்சர் டத்தோஸ்ரீ  ஆடாம் பாபா ஆகியோருடன் தாம் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு உதவும் வகையில் மாநில அரசு சுமார் பத்து கோடி  வெள்ளி செலவில் 30 லட்சம் முதல் 50 லட்சம் தடுப்பூசிகளை வாங்கவுள்ளதாக அமிருடின் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி அறிவித்திருந்தார்.


Pengarang :