ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சந்தையில் மிதமிஞ்சிய காய்கறிகள்- 30 டன் உற்பத்தி பொருள்களை சிலாங்கூர் அரசு கொள்முதல்

ஷா ஆலம், ஜூன் 7- மாநிலத்தின் பல மாவட்டங்களில் மிதமிஞ்சிய நிலையில் உள்ள 30 டன்  விவசாய மூலப்பொருள்களை சிலாங்கூர் அரசு வாங்கவிருக்கிறது,

அதிக உற்பத்தி காரணமாக விவசாய பொருள்களின் விற்பனையில் தேக்கம் கண்டுள்ளது தொடர்பில் சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், கோல லங்காட் ஆகிய மாவட்டங்களிலிருந்து கடந்த சனிக்கிழமை வரை  11 புகார்களைத் தாங்கள் பெற்றுள்ளதாக விவசாய அடிப்படை  பொருள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம்  ஹஷிம் கூறினார்.

வாழை (22,000 கிலோ), மரவள்ளிக் கிழங்கு (10,000 கிலோ), கொம்பு வாழை (1,000 கிலோ), மிளகாய், ஊசி மிளகாய் (300 கிலோ), கஸ்துரி ஆரஞ்சு (500 கிலோ) ஆகியவை சந்தையில் மிதமிஞ்சி காணப்படும் உற்பத்தி பொருள்களாகும் என்று அவர் சொன்னார்.

அந்த உற்பத்தி பொருள்களை நாங்கள் வாங்கி மாநிலத்திலுள்ள 12 அக்ரோ சந்தைகளில் விற்பனை செய்யவிருக்கிறோம். இதன் தொடர்பான விபரங்களை கூடிய விரைவில் வழங்குவோம் என்றார் அவர்.

உற்பத்தி அதிகரிப்பு காரணமாக சந்தையில் மிதமிஞ்சி காணப்படும் சோளம், மிளகாய், வாழை போன்ற உற்பத்தி பொருள்களை விவசாயிகளிடம் வாங்குவதற்கு சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகம் ஐந்து லட்சம் வெள்ளியை செலவிடும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இம்மாதம் 2 ஆம் தேதி கூறியிருந்தார்.

 


Pengarang :