A
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எல்.ஆர்.டி. விபத்து- அமைச்சரவையில் நாளை அறிக்கை தாக்கல்

புத்ரா ஜெயா, ஜூன் 8- கடந்த மாதம் 24ஆம் தேதி நிகழ்ந்த இரு எல்.ஆர்.டி. இலகு ரயில்கள் சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை நாளை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.

போக்குவரத்து  அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ இஷாம் இஷாக் தலைமையிலான ஒன்பது பேரடங்கிய குழு விசாரணைக் குழு இந்த அறிக்கையை தயார்  செய்ததாக அவர் சொன்னார்.

நிர்ணயிக்கப்பட்ட 14 நாள் கால அவகாசத்திற்குள்  நிபுணத்துவத்துடனும் விரிவாகவும் துல்லியமாகவும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது குறித்து தாம் மனநிறைவு கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களாக இரவு பகல் பாராமல் கடுமையாக பாடுபட்டதோடு சம்பவ இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டும் வழிகாட்டி ஆவணங்களை ஆராய்ந்தும் தங்கள் பணியை செவ்வனே முடித்த  விசாரணைக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

கடந்த மாதம் 24ஆம் தேதி இரவு 8.33 மணியளவில் கம்போங் பாரு எல்.ஆர்.டி. நிலையத்திற்கும் கே.எல்.சி.சி. எல்.ஆர்.டி. நிலையத்திற்கும் இடையே உள்ள சுரங்கப்பாதையில் 213 பயணிகளை ஏற்றிய இரயிலும் பயணிகள் இன்றி பரீட்சார்த்த பயணம் மேற்கொண்ட இரயிலும் மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்தனர்.


Pengarang :