ECONOMYHEALTHPBTSELANGOR

சுபாங் ஜெயா தொகுதி ஏற்பாட்டில்  சிஏசி மையத்திலுள்ள நோயாளிகளுக்கு 6,000 ரொட்டிகள் விநியோகம்

ஷா ஆலம், ஜூன் 8– மெலாவத்தி அரங்கில் செயல்படும் சி.ஏ.சி. எனப்படும் கோவிட்-19 நோய் மதிப்பீட்டு மையத்திற்கு வரும் நோயாளிகளுக்காக சுபாங் ஜெயா தொகுதி சார்பில் 6,000 ரொட்டி மற்றும் பானங்கள் இம்மாதம் முழுவதும் வழங்கப்படுகின்றன.

உணவு வீண் விரயம் செய்யப்படுவதற்கு எதிராக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர் அமைப்பு இத்திட்டத்திற்கு ரொட்டிகளையும் மனித ஆற்றலையும் வழங்கியுள்ள வேளையில் யஎஸ்ஜே5 குடியிருப்பாளர் சங்கம் 13,000 வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸி கூறினார்.

கோவிட்-19 பரிசோதனைக்காக வருவோர் இங்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் அவர்களின் பசி மற்றும் தாகத்தை போக்கும் வகையில் இந்த உணவுப் பொருள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

நோய்த் தொற்று பரவும் சாத்தியம் உள்ள காரணத்தால் இந்த சிஏசி மையத்தில் உணவு விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இங்கு வரும் கோவிட்-19 நோயாளிகள் குறிப்பாக முதியோர் மற்றும் சிறார்கள் உணவு கிடைப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்றார் அவர்.

மெலாவத்தி அரங்கிலுள்ள  சிஏசி மையத்தின் பிரதிநிதியிடம் அந்த உணவு பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :