ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சமையல் எண்ணெய் விலையேற்றம்- 11 வியாபாரிகளுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ்

ஷா ஆலம், ஜூன் 9- போத்தலில் அடைக்கப்பட்ட ஐந்து கிலோ சமையல் எண்ணெய்  விலையை உயர்த்தியது தொடர்பில் 11 வியாபாரிகளுக்கு உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநில பிரிவு விளக்கம் கோரும் நோட்டீசை வழங்கியுள்ளது.

கொள்முதல் செய்யப்பட்ட சமையல் எண்ணெயின் மொத்த எண்ணிக்கை மற்றும் வாங்கும் விலை உள்ளிட்ட தகவல்களை வியாபரிகள் தங்களிடம் ஒப்படைப்பதற்கு ஏதுவாக இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதாக அத்துறையின் இயக்குநர் முகமது ஜிக்ரி அசான் அப்துல்லா கூறினார்.

அத்தகவல்களின் அடிப்படை விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதிகப்பட்சமாக விலையை உயர்த்தியவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

இவ்விவகாரம் தொடர்பில் இதுவரை நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட வியாபாரிகளின் பதிலுக்காக ஐந்து நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை காத்திருப்போம். பின்னரே அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

ஐந்து கிலோ சமையல் எண்ணெயின் விலையை தங்களால் கட்டுப்படுத்த இயலாது எனக் கூறிய அவர், எனினும், 2011 ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வணிகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

அமைச்சின் சிலாங்கூர் மாநில பிரிவு நேற்று 23 சில்லரை வியாபாரிகளிடம் நடத்திய சோதனையில் ஐந்து கிலோ சமையல் எண்ணெய் வெ.25.50 அசல் விலையில் அல்லாமல் வெ.34.20 விலையில் விற்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.


Pengarang :