ECONOMYMEDIA STATEMENTNATIONALSUKANKINI

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மலேசியாவுக்கு தடையா? ஏற்பாட்டுக் குழு மறுப்பு

கோலாலம்பூர், ஜூன் 9– கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக அடுத்த மாதம் தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மலேசியா உள்ளிட்ட பத்து நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலை 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஏற்பாட்டுக்  குழுவின் தலைமை செயல்முறை அதிகாரி தோஷிரோ முத்தோ மறுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தடை விதிப்பதற்கான சாத்தியத்தைக் கூட தாங்கள் பரிசீலிக்கவில்லை என அவர் கூறினார்.

எனினும், அடுத்த மாதம் 23ஆம் தேதி நடைபெறும் அந்த போட்டியில் பங்கேற்க ஜப்பான் வருவதற்கு முன்னர் விளையாட்டாளர்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும் என சில நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டதாகச் சொன்னார்.

சில நாடுகளுக்கு தடை விதிப்பது தொடர்பான விஷயத்தை நாங்கள் கேள்விப்படவேயில்லை. இது முற்றிலும் அடிப்படையற்ற தகவலாகும் என்றார் அவர்.

இந்தியாவிலிருந்து பரவும் உருமாறிய புதிய வகை நோய்த் தொற்று குறித்த அச்சம் அனைவருக்கும் உள்ளது. அவர்கள் ஜப்பான் வருவதற்கு முன்னர் முழுமையாக தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேப்பாளம் மற்றும் அதன் தொடர்புடைய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் 100 விழுக்காடு தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.


Pengarang :