ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சமையல் எண்ணெய் விலையேற்றத்தை தடுக்க விலை வரம்பை நிர்ணயிப்பீர்

ஷா ஆலம், ஜூன் 10- சமையல் எண்ணெய் தொடர்ந்து விலையேற்றம் காண்பதை தடுப்பதற்கு ஏதுவாக அந்த அத்தியாவசிய சமையல் பொருளுக்கு விலை வரம்பை நிர்ணயிக்கும்படி அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நோக்கத்திற்காக 2011ஆம் ஆண்டு விலைக்கட்டுப்பாட்டு மற்றும் கொள்ளை லாப தடுப்புச் சட்டத்தை அமலாக்க அதிகாரிகள் பயன்படுத்தலாம் என்று கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் தெரிவித்தார்.

ஏற்றுமதிக்கான சமையல் எண்ணெயை சந்தை விலையிலும் உள்நாட்டு  தேவைக்கான சமையல் எண்ணெயை குறைந்த விலையிலும் விற்பதற்கு ஏதுவாக இரு நிலைகள் கொண்ட விலை முறையை அரசாங்கம் அரசாங்கம் நிர்ணயிக்கலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

இந்த நடைமுறையை அமல் செய்வதன் மூலம் உள்நாட்டு பயனீட்டுக்கான சமையல் எண்ணைய் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இதன் மூலம் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த முடியும் என்பதோடு  இந்த உணவுப் பொருளுக்கு அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையையும் குறைக்க இயலும் என்று பி,கே.ஆர். கட்சியின் பொதுச் செயலாளருமான அவர் சொன்னார்

உள்நாட்டுத் தேவைக்கு பத்து லட்சம் டன் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில் இரண்டு கோடி டன் எண்ணெய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் செம்பனை தொழில்துறை 7,000 கோடி வெள்ளி வருமானத்தை ஈட்டுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

இதன் அடிப்படையில் பார்த்தால் எனது இந்த ஆலோசனை ஆக்க கரமான பயனைத தரக்கூடியதாக அமையும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :