எதிர்க்கட்சியினருக்கும் நிதி ஒதுக்கீடு- சிலாங்கூரை மத்திய அரசு முன்மாதிரியாக கொள்ள வேண்டும்

ஷா ஆலம், ஜூன் 11- மக்கள் நலத் திட்டங்களை அமல் செய்வதற்காக எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த சிலாங்கூர் அரசின் நடவடிக்கையை மத்திய அரசும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்திலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 50,000 வெள்ளி கூடுதல் ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ள வேளையில் பக்கத்தான் ஹராப்பன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 30,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

டாக்டர் ஒங் கியான் மிங் (பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்)

பக்கத்தான் ஹராப்பான் எதிர்க்கட்சியாகிவிட்ட காரணத்தால் மத்திய அரசின் மானியம் நிறுத்தப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மானியம் வழங்கும் மாநில அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கதாக விளங்குகிறது. கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக  கூடுதலாக 30,000 வெள்ளியை வழங்கிய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

 

காலிட் சமாட் (ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர்)

இந்த நிதி ஒதுக்கீட்டை வழங்கிய மாநில அரசுக்கு நன்றி. எதிர்க்கட்சி என்ற முறையில் முன்பு போல் எங்களுக்கு மானியம் கிடைப்பதில்லை. இருந்த போதிலும் எங்களால் இயன்ற அளவு தொகுதி மக்களுக்கு உதவி வருகிறோம். 

 

சிவராசா ராசையா (சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர்)

உதவி தேவைப்படுவோருக்கு குறிப்பாக, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதில் இந்த நிதி ஒதுக்கீடு பெரிதும் துணை புரியும். மத்திய அரசின் மானியம் கிடைக்காத நிலையில் மக்களுக்கு சேவையாற்றுவதில் கடும் சவாலை எதிர்நோக்கியிருக்கும் எங்களுக்கு மாநில அரசின் இந்த மானியம் பெரிதும் உதவியாக உள்ளது.

 

முகமது சாபு ( கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர்)

மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் இன்றைய சூழலில் இந்த நிதி ஒதுக்கீடு பெரும் உதவியாக உள்ளது.  குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவுவதற்கு இந்த நிதி துணை புரியும்

சிலாங்கூர் மாநில எதிர்கட்சித்  தலைவர் ரிஸாம் இஸ்மாயில்

உணவுக் கூடை   திட்டத்தை அமல் செய்ய எதிர்க்கட்சி தொகுதிகள் உள்பட அனைத்து தொகுதிகளுக்கும் கூடுதலாக 50,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்த மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  கோவிட்- 19 நோய்த் தொற்றினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கு தற்போதைய சூழலில் கட்சி வேறுபாடின்றி அனைத்து தொகுதிகளுக்கு நிதியுதவி மாநில அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

 


Pengarang :