HEALTHMEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலம் மாநகர் மன்ற ஏற்பாட்டில் 2,000 பேருக்கு உணவுக் கூடைகள் விநியோகம்

ஷா ஆலம், ஜூன் 12- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் சுமார் 2,000 முன்களப் பணியாளர்கள் மற்றும் மாநகர் வாசிகளுக்கு  உணவுக் கூடைகள் வழங்கப்படும். இந்நிகழ்வு அடுத்த வாரம் நடைபெறும் என்று மாநகர் மன்றத்தின் இடைக்கால டத்தோ பண்டார் முகமது  ரஷிடி ருஸ்லான் கூறினார்.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் பரிவு உதவித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் வழி கடந்த பிப்ரவரி மாதம் முதல் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட  உணவுக் கூடைகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாக  அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் திட்டத்தை அறிவித்துள்ள சிலாங்கூர் மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்த உதவி திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த உணவு கூடை  திட்டத்தை அமல்படுத்துவதற்கு தொடக்க கட்டமாக 150,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. 99 ஸ்பீட்மார்ட் நிறுவனத்தின் வாயிலாக ஷா ஆலம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பின் வழி 160,000 வெள்ளி வசூலாகியுள்ளது என்றார் அவர்.

இங்குள்ள எம்.எஸ்.யு. மருத்துவ மையத்தில் முன்களப் பணியாளர்களுக்கு உணவுக் கூடைகளை வழஙகும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த மருத்துவ மையத்தின் தடுப்பூசி செலுத்தும் மையத்தில் பணிபுரியும்  40 பணியாளர்களுக்கு 50 வெள்ளி மதிப்பிலான கோதுமை, சமையல் எண்ணெய், அரிசி, சீனி உள்ளிட்ட பொருள்கள் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன.


Pengarang :