MEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 சம்பவங்கள் 4,000 ஆக குறைந்தால் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் தளர்த்தப்படும்

ஜோகூர் பாரு, ஜூன் 13- தினசரி கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை நான்காயிரத்திற்கும் கீழ் குறைந்தால் இம்மாதம் முதல் தேதி அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்.

எனினும். தற்போது அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அகற்றப்படாது என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை நான்காயிரமாக குறைந்தால் நாம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மறுபரிசீலனை செய்யலாம் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபாவும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர்  நோர் ஹிஷாம் அப்துல்லாவும் என்னிடம் கூறினர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பது இதன் பொருளல்ல. மாறாக எஸ்.ஒ.பி. விதிமுறைகளை தளர்த்துவது குறித்து நாம் பரிசீலிக்கலாம் என்றார் அவர்.

இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் மலேசிய ஆயுதப்படைகளின் மருத்துவமனையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 சம்பவங்களின் தினசரி எண்ணிக்கை நான்காயிரத்திற்கும் கீழ் குறையும் பட்சத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் பரிந்துரையை முன்வைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :