ECONOMYMEDIA STATEMENTNATIONAL

48 கோவிட்-19 நோயாளிகள் லோரியில் பயணம்- போலீஸ் நடவடிக்கை

சுங்கை பட்டாணி, ஜூன் 14- பாதுகாப்பு அம்சம் ஏதுமின்றி 48 கோவிட்-19 அந்நியத் தொழிலாளர்களை லோரியில் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டதோடு முதலாளி மீதும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அந்த கோவிட்-19 நோயாளிகளை ஏற்றிய லோரி சாலையில் பயணிப்பதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் நேற்று மாலை பகிரப்பட்டதைத் தொடர்ந்து போலீசார்  விரைந்து நடவடிக்கை மேகொண்டனர்.

நேற்று மாலை 5.00 மணியளவில் இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த லோரியை பீடோங், சுங்கை லாலாங் பகுதியில் தடுத்து நிறுத்தியதாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அட்ஸில் அபு ஷா கூறினார்.

அந்த லோரி  கோல மூடா மாவட்ட சுகாதார மையத்திலிருந்து சுங்கை லாலாங்கில் உள்ள கோழிகளை பதப்படுத்தும் தொழிற்சாலையின் தொழிலாளர் தங்கும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

நாங்கள் மேற்கொண்ட சோதனையில் அந்த லோரியில் கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 48 இருந்தனர். தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் என்பதை அடையாளப்படுத்தும் இளஞ்சிவப்பு வில்லையை அவர்கள்  மணிக்கட்டில் அணிந்திருந்தனர் என்று அறிக்கை ஒன்றில் அவர்  தெரிவித்தார்.

அந்த கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையில் கோவிட்-19 நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு வேலை செய்யும் அனைத்து 135 தொழிலாளர்களும் பரிசோதனைக்காகவும் கையில் வில்லையை அணிவிப்பதற்காகவும் கோல மூடா மாவட்ட  சுகாதார அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த 135 தொழிலாளர்களையும் சுகாதார மையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்ல முதலாளி லோரி ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததாக கூறிய அவர், ஏற்கனவே இரு முறை தொழிலாளர்களை ஏற்றும் பணி முடிவடைந்த நிலையில் இறுதியாக மேற்கொண்ட பயணத்தின் போது பொதுமக்கள் பார்வையில் அவர்கள் சிக்கியதாக சொன்னார்.


Pengarang :