MEDIA STATEMENTPBTSELANGOR

கிள்ளான் ஆற்றுப்பாலத்தில் திரண்ட கூட்டம்-  54 பேருக்கு அபராதம்

கிள்ளான், ஜூன் 14– இங்குள்ள ராஜா மூடா நாலா ஆற்றுப் பாலத்தில் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 54 பேருக்கு போலீசார் தலா இரண்டாயிரம் வெள்ளி அபராதம் விதித்தனர்.

பதினேழு முதல் நாற்பது வயது வரையிலான அந்த 54 பேரும் உடற்பயிற்சியை மேற்கொண்டப் பின்னர் அப்பாலத்தில் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமார் ரம்லி கூறினார்.

நேற்று மாலை 6.00 மணியளவில் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து போலீஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

பெரும் எண்ணிக்கையிலானோர் சாலையோரம் கார்களை நிறுத்தி விட்டு அந்த பாலத்தில் குழுமி நின்று வேடிக்கை பார்த்துக கொண்டிருந்ததை போலீஸ் குழு கண்டது. அந்த பாலம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக கடந்த ஜூன் முதல் தேதி தொடங்கி பயன்பாட்டிற்கு மூடப்பட்டிருந்தது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

அந்த ஆற்றுப்பாலம் மீது பலர் கூட்டமாக நிற்பதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் நேற்று பரவலாக பகிரப்பட்டு வந்தது.


Pengarang :