ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் அட்வான்ஸ் திட்டத்தின் வழி பயன்பெற சிறு,நடுத்தர தொழில்துறையினருக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூன் 14- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பணப்புழக்கப் பற்றாக்குறை பிரச்னையைக் களைய சிலாங்கூர் அட்வான்ஸ் நிதியளிப்பு திட்டத்தின் அனுகூலங்களைப் பயன்படுத்திக் கொள்ளும்படி மாநிலத்திலுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சவால்மிகுந்த இக்காலக்கட்டத்தில் தங்களின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பினை இத்திட்டத்தின் வாயிலாக சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பெற முடியும் என்று முதலீட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

மிக உன்னத திட்டமாக இந்த சிலாங்கூர் அட்வான்ஸ் விளங்குகிறது. சிலாங்கூரிடம் போதுமான நிதி கையிருப்பு இல்லாவிட்டாலும் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு ஆக்ககரமான முறையில் உதவும் மாநிலமாக அது விளங்குகிறது என்றார் அவர்.

தன்னிடம் உள்ள வரையறுக்கப்பட்ட நிதி வளத்தைக் கொண்டு வர்த்தகத் துறையினருக்கு குறிப்பாக சிறு  மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு உதவும் கடப்பாட்டை மாநில அரசு கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவும் நோக்கில் பத்து கோடி வெள்ளி மூலதனத்தில்  இந்த சிலாங்கூர் அட்வான்ஸ் திட்டத்தை மாநில அரசு கடந்தாண்டு ஜூன் மாதம் தொடக்கியது.

இந்த சிலாங்கூர் அட்வான்ஸ் திட்டத்திற்கு மேலும் 20 கோடி வெள்ளி ஒதுக்கப்படும் தகவல் அண்மையில் கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தை அறிவித்த போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வெளியிட்டார்.

 


Pengarang :