ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

தடுப்பூசி மையங்களுக்கு செல்வதற்கான கட்டண கழிவுக்கு ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜூன் 15- தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் செல்வதற்கு கிராப் வாடகை கார் சேவையை பயன்படுத்துவோர் மாநில அரசின் 20 வெள்ளி கட்டண கழிவுக்கு இம்மாதம் 20ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த கட்டண கழிவு திட்டத்தில் 50 வயதுக்கும் மேற்பட்ட சிலாங்கூர் வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எம்.பி.ஐ.எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

கடந்த வாரம் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்த கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் ஏதாவது ஒரு திட்டத்தின்  வாயிலாக பெறுவதற்குரிய வாய்ப்பு மாநிலத்திலுள்ள சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு  உள்ளதாக அவர் சொன்னார்.

மாநிலத்தில் 34 கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் மையங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அம்மையங்களுக்குச் செல்வதற்கு 10 வெள்ளியும் வீடு திரும்புவதற்கு 10 வெள்ளியும் சிறப்பு கழிவாக வழங்கப்படும். அதிகமானோர் தடுப்பூசியை பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் அமல் படுத்தப்படுகிறது என்றார் அவர்.

போக்குவரத்து வசதி இல்லை, கையில் பணம் இல்லை என்ற காரணங்களை யாரும் இனி கூற முடியாது. இதன் மூலம் அதிகமானோர் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்ய முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கட்டணக் கழிவு திட்டம் மூலம் அதிகமானோர் பயன்பெறுவதை  உறுதி செய்ய முழு ஒத்துழைப்பை வழங்கும்படி சட்டமன்ற உறுப்பினர்களின் சேவை மையங்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சமூகத் தலைவர்களை தாங்கள் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :