ECONOMYSELANGORYB ACTIVITIES

ஆகஸ்டு முதல் தேதிக்கு பிறகு அவசரகாலம்  தேவையில்லை- ஆட்சியாளர்கள் உத்தரவு

ஆகஸ்டு முதல் தேதிக்கு பிறகு அவசரகாலம்  தேவையில்லை- ஆட்சியாளர்கள் உத்தரவு

 

ஷா ஆலம், ஜூன் 17- வரும் ஆகஸ்டு மாதம் முதல் தேதி அவசரகால நிலை காலாவதியானவுடன் அதனை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இஸ்தானா நெகாராவில் நேற்று மாட்சிமை தங்கிய பேரரசருடன் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஆட்சியாளர்கள் ஒருமித்த கருத்துடன் எடுத்த ஏழு முடிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜனவரி மாதம் 11 ஆம் தேதி அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியது. எனினும், கடந்தாண்டு அக்டோபர் மாதம் இதே போல் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் செய்த விண்ணப்பத்தை மாமன்னர் நிராகரித்து விட்டார்.

கீழ்க்கண்ட ஆறு அம்சங்கள் மீது ஆட்சியாளர்கள் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அரச முத்திரை காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டேனியல் சைட் அகமது கூறினார்.

  1. இதர விஷயங்களைக் காட்டிலும் மக்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்
  2. 80 விழுக்காட்டு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை விரைந்து உருவாக்குவதற்கு ஏதுவாக நிர்வாக நடைமுறைகளைக் குறைத்து தடுப்பூசி இயக்கத்தை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
  3. கோவிட்-19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தாத வகையில் மக்களுக்கு புரியக்கூடியவையாகவும் மக்களின் ஆதரவைப் பெற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதோடு அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்ற சந்தேகத்தை ஏற்படாத வகையிலும் அமைய வேண்டும்
  4. கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் விரிவானதாகவும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும் பிறரின் கருத்துகளை கேட்டறியக்கூடிய, மாற்றங்களைச் செய்யத் தயாராக இருக்கக்கூடிய மற்றும் புதிய மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொள்ளக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.
  5. அதிகரித்து வரும் அரசியல் உஷ்ணம் தணிக்கப்பட வேண்டும்
  6. நிலைத்தன்மையும் நம்பிக்கையும் பெரும்பாலான மக்களின் ஆதரவையும் அரசாங்கம் பெற்றிருப்பது அவசியம்.

Pengarang :