MEDIA STATEMENTNATIONALPress Statements

குறிப்பிட்ட ஒரு தலைவரிடம் மட்டும் அதிக விசுவாசத்தை  காட்டாதீர்- கெஅடிலான் உறுப்பினர்களுக்கு அன்வார் நினைவுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 21– குறிப்பிட்ட ஒரு தலைவருக்கு அல்லது ஒரு தரப்புக்கு மட்டும் அதிக விசுவாசமாக இருப்பதை தவிர்க்கும்படி கெஅடிலான் கட்சி உறுப்பினர்கள் நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகைய நடவடிக்கை கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாத சிந்தனைப் போக்கை உருவாக்கும் என்று கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இத்தகைய வெறித்தனமான பற்றுதல் கட்சித் தலைமைத்துவத்தின் முடிவுகளுக்கு எதிராக செயல்படுவதற்குரிய சூழலையும் உருவாக்கும் என்றும் அவர் சொன்னார்.

என் மீதோ அல்லது மற்ற தலைவர்கள் மீதோ சில சமயங்களில் அதீத பற்று வைப்பது நமது பலவீனமாக உள்ளது. இதன் காரணமாக நமது மனது கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக செயல்படத் தொடங்குவதோடு கட்சியில் தனித் தனி  குழுக்கள் உருவாக்கம் காண்பதையும் அனுமதிக்கிறது என்றார் அவர்.

இன்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற 2020ஆம் ஆண்டிற்கான கெஅடிலான் கட்சியின் பேராளர் மாநாட்டில் விவாதங்களை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கட்சியின் தலைமைத்துவத்தின் முடிவு மீது இணக்கப் போக்கை கொண்டிராதவர்கள் அது குறித்து தாராளமாக விவாதிக்கலாம். குறிப்பிட்ட ‘கூட்டமைப்பின்‘ ஒரு பகுதியாக இருந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவது அவசியம் என்று அன்வார் கூறினார்.


Pengarang :