உரிமையாளருக்கு தெரியாமல் மேசையை இடம் மாற்றினார்- ஆடவருக்கு வெ.800 அபராதம்

கோலாலம்பூர், ஜூன் 22– வாடகை வீட்டிலிருந்து மரத்திலான மேசையை உரிமையாளருக்கு தெரியாமல் வேறு வீட்டிற்கு இட மாற்றம் செய்த வணிகர் ஒருவருக்கு செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 800 வெள்ளி அபராதம் விதித்தது.

கடந்த மே மாதம் 14ஆம் தேதி மாலை 3.00 மணியளவில் பத்து கேவ்ஸ், தாமான் இண்டாவில் உள்ள ஒரு இக்குற்றத்தைப் புரிந்ததை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து முகமது பிருள் அஸிமான் முகமது ரோஸ்டி (வயது 29) என்ற அந்த ஆடவருக்கு மாஜிஸ்திரேட் நிக் பாடில் அஸ்லான்  இத்தண்டனையை வழங்கினார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓராண்டுச் சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம் விதிக்க வகை செய்யும் 1955 ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் 15(2)(சி) பிரிவின் கீழ் அவ்வாடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

வீட்டு உரிமையாளர் கடந்த மாதம் 15ஆம் தேதி தனது  வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்த உணவு மேசை காணாமல் போனதை அறிந்தார். நண்பரின் உதவியுடன் தாமான் கெமிலாங்கில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று பார்த்த போது தன் வீட்டில் முன்பு வாடகைக்கு இருந்த நபர் அந்த மேசையை வைத்திருப்பதைக் கண்டார். அந்த வீட்டு உரிமையாளர்  இச்சம்பவம் தொடர்பில் அவர் போலீசில் புகார் செய்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட முகமது பிருள்  தனக்கு விதிக்கப்பட்ட அபாரதத் தொகையை செலுத்தினார்.


Pengarang :