ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கும்புலான் டாருல் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் பணியாளர்கள் 300 பேர் தடுப்பூசி பெற்றனர்

ஷா ஆலம், ஜூன் 28– கும்புலான் டாருல் ஏசான வேஸ்ட் மேனெமெண்ட் மற்றும் அதன் துணை நிறுவனமான ஹேபாட் அடாபி நிறுவனத்தின் 300 பணியாளர்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்.

சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு பாங்கி, ஈவோ மாலில் உள்ள தடுப்பூசி மையத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பணி நிமித்தமாக அடிக்கடி வெளியில் செல்லும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த  தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமல் செய்யப்பட்டதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

இத்தொழிலாளர்கள் கண்காணிப்பு பணிக்காகவும் குப்பைகளை அகற்றுவதற்காகவும் தொழில்பேட்டைகள், சந்தைகள், வீடமைப்பு பகுதிகள் மற்றும் வர்த்தக மையங்களுக்கு 365 நாட்களும் செல்ல வேண்டியுள்ளது.

ஆகவே, அவர்களின்  பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல் நோய்த் தொற்றிலிருந்து உடனடி பாதுகாப்பு கொடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டோம். இதன் அடிப்படையில் நேற்று 85 விழுக்காட்டுத் தொழிலாளர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றார் அவர்.

தங்கள் நிறுவனத் தொழிலாளர்கள் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த ஏற்பாட்டை செய்த  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய நடவடிக்கையின் வாயிலாக நோய்த் தொற்றிலிருந்து முழு பாதுகாப்பு பெற்ற சமுதாயத்தை விரைவில் பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


Pengarang :