HEALTHMEDIA STATEMENTNATIONAL

நுரையீரலில் பாதி செயலிழந்து விட்டது- துடிப்புடன் செயல்பட முடியாத நிலையில் கோவிட்-19 நோயாளி

கோலாலம்பூர், ஜூன் 28- கோவிட்-19 நோய்த் தாக்குதல் காரணமாக எனது நுரையீரலில் பாதி செயல்பட முடியாமல் போய்விட்டது-  இதுவே நிரந்தரம் என்றாகிவிட்ட நிலையில் எனது உடல் பழைய நிலைக்கு திரும்புவது ஏறக்குறைய சாத்தியமற்றதாகி விட்டது என்கிறார் நிர்வாகப் பிரிவு உயர் அதிகாரியான அமிரா ருஸ்லான் (வயது 29)

கோவிட்-19 நோய்த் தொற்றின் ஐந்தாம் கட்டத்தை எட்டி உயிருடன் மீண்டு வந்தவர் இவராவார். நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த ஜனவரி 7ஆம் தேதி சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்,  33 நாட்கள் உயிருக்கு போராட்டம் நடத்தியுள்ளார். அதில் 9 நாட்கள் தீவிர கிகிச்சைப் பிரிவில் “உறக்கநிலையில்“ அதாவது கோமாவில் இருந்துள்ளார்.

இப்போது எனது  நுரையீரல் 48 விழுக்காடு மட்டுமே செயல்படுகிறது. பாதி நுரையீல் ஏறக்குறையை உயிரற்றுப் போய்விட்டது. எனது உடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம் என மருத்துவர்கள் கூறி விட்டனர். முன்பு போல் என்னால் சுறுசுறுப்புடன் செயல்படவும் முடியாதாம்.

“லோங் கோவிட்“ எனும்  இந்த பாதிப்பு எனது அன்றாட வாழ்க்கையையும் பெரிதும் பாதித்து விட்டது. பேசினால்கூட உடல் களைப்பாகி விடுகிறது. துணிகளை காயப்போடுவது போன்ற எளிதான பணிகள்கூட பெரும் சுமையாக தெரிகிறது என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் தாம் எந்த கடும் நோயினாலும் பீடிக்கப்பட்டதில்லை எனக் கூறிய அவர், கட்டுக்கதை என சில தரப்பினரால் கூறப்படும் ஆட்கொல்லி நோயான இந்த கோவிட்-19 கடும் பாதிப்புகளை தமக்கு ஏற்படுத்தும் என கனவிலும் நினைத்ததில்லை என்றார்.

இந்த நோய்த் தாக்கம் காரணமாக சுவாசிப்பது தொடர்பான பிஸியோதெராப் சிகிச்சையை பெறுவதற்காக தாம் அடிக்கடி மருத்துவமனைக்கு  செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டர்.

இது மட்டுமல்ல, தீவிர சிகிச்சைப் பிரிவில் வழங்கப்பட்ட சிகிச்சையின் போது நுரையீரலுக்குள் டியூப் சொருகப்பட்டதால் தொண்டை மற்றும் நெஞ்சில் கடுமையான வலியை ஏற்படுத்தியுள்ளது. அதோ மட்டுமின்றி அதிகப்படியான மருந்துகளை உட்கொண்டதால் எனது நினைவாற்றலும் பாதிக்கப்பட்டு விட்டது என்றார் அவர். 

 


Pengarang :