ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சேம நிதியிலிருந்து 5,000 வெள்ளி வரை மீட்க அரசாங்கம் அனுமதி

ஷா ஆலம், ஜூன் 28- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட 1 கோடியே 26 லட்சம் ஊழியர் சேம நிதி வாரிய (இ.பி.எஃப்.) உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து 5,000 வெள்ளி வரை மீட்க அனுமதிக்கப்படுவர்.

ஐ-சித்ரா திட்டத்தின் வாயிலாக இந்த பண மீட்புக்கான அனுமதி வழங்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார். உறுப்பினர்களின் சேமிப்புத் தொகையை பொறுத்து மாதம் 1,000 வெள்ளி வீதம் ஐந்து மாதங்களுக்கு பணத்தை மீட்கலாம் எனவும் அவர் சொன்னார்.

வரும் ஜூலை 16ஆம்  தேதி தொடங்கி http://icitra.kwsp.gov.my   எனும் அகப்பக்கம் வாயிலாக இதற்கான விண்ணப்பங்களைச் செய்யலாம்.  முதல் கட்டத் தொகை வரும் ஆகஸ்டு மாதம் உறுப்பினர்களின்  வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.

 தங்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இந்த ஐ-சித்ரா திட்டத்தின் கீழ் 3,000 கோடி வெள்ளி மக்களுக்கு வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்சி உதவித் தொகுப்பை வெளியிட்ட போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இதர உதவிகள் வருமாறு-

  1. கோவிட்-19 சிறப்பு உதவி ஆண்டு இறுதி வரை வழங்கப்படும்

அ). பரம ஏழைகளுக்கு வெ.1.300/ திருமணமாகாதவர்களுக்கு வெ.500 

ஆ). பி40 குடும்பங்களுக்கு வெ.300/ திருமணமாகாதவர்களுக்கு வெ. 200

இ). எம்40 குடும்பங்களுக்கு வெ.250/ திருமணமாகாதவர்களுக்கு வெ. 100

  1. இ.பி.எஃப். மற்றும் சொக்சோ தரவுகளின் அடிப்டையில் 2021இல் வேலை இழந்தவர்களுக்கு 500 வெள்ளி உதவித் தொகை
  2. சொக்சோ சந்தாதாரர் அல்லாதோருக்கு வேலை தேடும் அலவன்சாக வெ. 300 வழங்கப்படும்
  3. உணவுக் கூடை திட்டத்திற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 300,000 வெள்ளி ஒதுக்கீடு
  4. பூர்வக்குடியினருக்கான உணவுக் கூடை திட்டத்திற்கு 1 கோடி வெள்ளி ஒதுக்கீடு
  5. தங்குமிடம் இல்லாதவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சாரா அமைப்புகளின் வாயிலாக உதவ வெ.1.5 கோடி ஒதுக்கீடு
  6. மாதம் ஒன்றுக்கு கூடுதல் பட்சம் 900 கிலோவாட் மணி நேர மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு 5 முதல் 40 விழுக்காடு வரை மின்சார கட்டணக் கழிவு
  7. இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி  வரை தினசரி ஒரு கிகாபைட் இலவச இணைய தரவு விநியோகம்

Pengarang :