Tourism Selangor dengan kerjasama Mita membawa wakil agensi pelancongan dan media ke Jeti Sirip Biru, Sepang pada 23 Julai 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசித் திட்டத்தில் சுற்றுலாத் துறையினருக்கு முன்னுரிமை அளிப்பீர்- சுற்றுலா சங்கம் வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூன் 29- நாட்டில் சுற்றுலாத் துறை மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு ஏதுவாக தடுப்பூசித் திட்டத்தில் சுற்றுலாத் துறை சார்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்கள் உள்நாட்டில் சுற்றுலா மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று  சஃப்டா எனப்படும் சிலாங்கூர் மாநில சுற்றுலா நிறுவன சங்கத்தின் தலைவர் டாக்டர் ஃபாத்திர் பட்ரில் அல்ஹடாட் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஈராண்டுகளாக முடங்கிக் கிடக்கும் சுற்றுலாத் துறைக்கு உயிரூட்டுவதற்கு இந்த நடவடிக்கை பெரிதும் துணை புரியும் என்று அவர் தெரிவித்தார்.

மாநில அரசாங்கம் தொழிற்சாலை ஊழியர்களை இலக்காக கொண்டு தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சுற்றுலாத் துறையும் எழுச்சி பெறுவதற்கு ஏதுவாக தடுப்பூசி திட்டத்தை அத்துறை சார்ந்தவர்களுக்கும் அரசாங்கம் விரிவுபடுத்த வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பாகும் என்றார் அவர்.

மலேசிய ஹோட்டல் நடத்துநர்கள் சங்கத்தின் சிலாங்கூர் மாநில பிரிவுத் துணை தலைவர் முகமது நஸ்ரி அகமதுவும் இந்த கருத்தை பிரதிபலித்துள்ளார்.  சுற்றுலாத் துறையினரும்  மற்ற முன்களப் பணியாளர்களைப் போல் பொது மக்களுடன் அணுக்கமாக செயலாற்ற வேண்டிய நிலையில் உள்ளதால் அவர்களுக்கும் தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சுற்றுலாத் துறை சார்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் பட்சத்தில் சுற்றுலா மேற்கொள்வதற்கும் ஹோட்டல்களில் தங்குவதற்கும் பொதுமக்களுக்கு தைரியமும் நம்பிக்கையும் ஏற்படும். இதன் மூலம் சுற்றுலாத் துறை விரைவில் மீட்சி காணும் என்றார் அவர்.

 


Pengarang :