MEDIA STATEMENTNATIONALSELANGOR

பங்சாபுரி ஸ்ரீ ஆயுவில் பி.கே.பி.டி. அமல்- பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருள் விநியோகம்

ஷா ஆலம், ஜூன் 30- கடுமையாக்கபட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமலாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பண்டார் பாரு பாங்கி, பங்சாபுரி ஸ்ரீ ஆயு குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கு அடிப்படை உதவிப் பொருள்களை சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜொஹார் இன்று வழங்கவிருக்கிறார்.

மாவட்ட மற்றும் நில அலுவலகம் வழங்கிய பெயர்ப்பட்டியலின் அடிப்படையில் இன்று தொடங்கி 14 நாட்களுக்கு அக்குடியிருப்பில் உள்ளவர்களுக்கு உணவு உள்பட அடிப்படை உதவிப் பொருள்கள் விநியோகிக்கப்படும் என்று மஸ்வான் சொன்னார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைக்கேற்ப உணவு மற்றும் உதவிப் பொருள்களை தயார் செய்து வழங்குவது வழக்கம். தேவைப்படும் பொருள்கள் குறித்த தகவல் கிடைத்தவுடன் சட்டமன்ற உறுப்பினர் நிதியைப் பயன்படுத்தி அப்பொருள்களை தயார் செய்து விநியோகிப்போம் என்றார் அவர்.

சுங்கை ராமால் தொகுதியில் நோய்த் தொற்று அதிகரிப்பு கண்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு மறுபடியும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பங்சாபுரி ஸ்ரீ ஆயு தவிர்த்து சிலாங்கூரில் உள்ள மேலும் மூன்று இடங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்தில் 454 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


Pengarang :