HEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

கிள்ளான், ஷா ஆலம் மருத்துவமனைகளில் கட்டில்கள், பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஷா ஆலம், ஜூலை 9– நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை மற்றும் ஷா ஆலம் மருத்துவமனையில் கட்டில்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா அதிகரிக்கவுள்ளது.

மூன்றாம்  மற்றும் அதற்கும் மேற்பட்ட நிலைகளில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த மாத இறுதியிலிருந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙடிமான் கூறினார்.

மலேசிய ஆயுதப்படையின் வாயிலாக கள மருத்துவமனை அமைக்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் மருத்துவ உபகரணங்களை தருவிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

அதே சமயம், கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே உள்ள மருத்துவ அதிகாரிகள், தாதியர், துணை மருத்துவ உதவியாளர்களை உள்ளடக்கிய சுகாதாரப் பணியாளர்களை  இங்கு தருவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிக்கையின் வாயிலாக அவர் குறிப்பிட்டார்.

கிள்ளான் மற்றும் ஷா ஆலம் மருத்துவமனைகளின்  அவசரப் பிரிவில் நிரம்பி வழியும் நோயாளிகள் குறித்த படங்கள் சமூக ஊடகடங்களில் வெளியானது தொடர்பில் அவர் இந்த விளக்கத்தை அளித்தார்.

ஷா ஆலம் மருத்துவமனை கோவிட்-19  நோய்க்கு அல்லாமல் பொதுவான நோய்களுக்கான பெட்டாலிங் மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட காரணத்தால் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு அதிக அளவில் குவியத் தொடங்கியதே இந்த நெரிசலுக்கு காரணம் என்றும் அவர் விளக்கினார்.

கிள்ளான்  மருத்துவனையைப் பொறுத்த வரை, அவசர சிகிச்சைப் பரிவில் முன்னதாக சிகிச்சை வழங்கப்பட்டு வார்டுகளில் சேர்க்கப்படுவதற்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே கட்டில்கள் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர். 


Pengarang :