ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஸ்ரீ அண்டாலாஸ் சி.ஏ.சி. மையம் கோலக் கிள்ளானுக்கு மாற்றம்

கிள்ளான், ஜூலை 29- இங்குள்ள ஸ்ரீ அண்டாலாஸ் விளையாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் கோவிட்-19 மதிப்பீட்டு மையம் (சி.ஏ.சி.) கோலக் கிள்ளான் பல்நோக்கு மண்டபத்திற்கு மாற்றப்படுகிறது.

புதிய சி.ஏ.சி. மையம் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி செயல்படும் என்று சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மாநில பேரிடர் நடவடிக்கை குழுவின் தலைவர் டத்தோ நோர் அஸ்மி டிரோனுடன் கடந்த 25 ஆம் தேதி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்த சி.ஏ.சி. மையத்தை உடனடியாக மாற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த புதிய மையம் பொதுமக்களின் குடியிருப்புக்கு வெகு தொலைவில் அமைந்துள்ளதோடு போதுமான கார் நிறுத்துமிட வசதியையும் கொண்டுள்ளது என்றார் அவர்.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத்தில்  உள்ள கோவிட்-19 நோயாளிகள் தங்கள் உடல் நிலையை மதிப்பீடு செய்வதற்கு சி.ஏ.சி. மையம் வர வேண்டியதில்லை என்ற சுகாதார அமைச்சின் முடிவின் அடிப்படையில் இந்த இட மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் இருக்கும் விளையாட்டு அரங்கை ஏ.சி.சி. மையமாக மாற்றும் சுகாதார அமைச்சின் முடிவுக்கு ஸ்ரீ அண்டாலாஸ் வட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அமைச்சின் இந்நடவடிக்கை காரணமாக சுற்றுவட்டாரத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.


Pengarang :