செர்டாங் மருத்துவமனை முழு கோவிட்-19 மருத்துவமனையாக மாற்றம்

ஷா ஆலம், ஜூலை 30- செர்டாங் மருத்துவமனை முழு கோவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. சிலாங்கூரில்  கோவிட்-19 மருத்துவமனையாக தகுதி மாற்றம் செய்யப்பட்ட நான்காவது மருத்துவமனை இதுவாகும்.

இந்த மருத்துவமனையை தகுதி மாற்றம் செய்வது தொடர்பான முடிவை கிள்ளான் பள்ளத்தாக்கு பொது சுகாதார நடவடிக்கை குழு நேற்று முன்தினம் எடுத்ததாக துணை சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சோங் சீ கியோங் கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் கோவிட்-19 பெருந்தொற்று அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து செர்டாங் மருத்துவமனையின் இருதய சிகிச்சை சேவை இதர மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு குறிப்பாக கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பணியை சீராக மேற்கொள்ள இந்நடவடிக்கை பெரிதும் துணை புரியும் என்று அவர்  சொன்னார்.

சுங்கை பூலோ மருத்துவமனை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரத்தியேக மருத்துவமனையாக கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 23ஆம் தேதி மாற்றப்பட்டது.

அம்பாங் மருத்துவமனையை கோவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவமனையாக மாற்ற சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா கடந்த 23 ஆம் தேதி முடிவெடுத்தது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் 21 ஆம் தேதி செலாயாங் மருத்துவமனையும் கோவிட்-19 மருத்துவமனையாக தகுதி மாற்றம் செய்யப்பட்டது.

 


Pengarang :