S
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

அந்நியத் தொழிலாளர்களுக்கு பிரத்தியேக தடுப்பூசி மையங்கள்-சி.ஐ.டி.எஃப். பரிசீலனை

கோலாலம்பூர், ஜூலை 30- தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக அந்நியத் தொழிலாளர்களுக்கு மொழி வாரியாக பிரத்தியேக தடுப்புசி செலுத்தும் மையங்களை ஏற்படுததுவதற்கான சாத்தியத்தை சி.ஐ.டி.எஃப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசித் திட்ட சிறப்பு பணிக்குழு ஆராய்ந்து வருகிறது.

இத்தகைய பிரத்தியேக மையங்களை ஏற்படுத்துவதன் மூலம் மொழிப் பெயர்ப்பாளர்கள் மற்றும் தொண்டூழியர்களை அங்கு பணியமர்த்த முடியும் என்று அப்பணிக்குழு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

மேலும், இந்நடவடிக்கையின் வாயிலாக தடுப்பூசி செலுத்தும் மையங்களில் அதிக எண்ணிக்கையிலானோர் ஒரே சமயத்தில் கூடுவதையும் அதனால் எஸ்.ஒ.பி.  விதிமீறல் சம்பவங்கள் நிகழ்வதையும் தடுக்க முடியும் என்று அது குறிப்பிட்டது.

பாரங்களைப் பூர்த்தி செய்வதிலும் மைசெஜாத்ரா செயலியை பதிவிறக்கம் செய்வதிலும்  அந்நிய நாட்டினர் காட்டும் தாமதப் போக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை சுணக்கம் காணச் செய்கிறது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரத்தை பூர்த்தி செய்ய ஒவ்வொரு தொழிலாளரும் ஐந்து நிமிட நேரத்தை எடுத்துக் கொள்கிறார். இதனால் பதிவு செய்யும் முகப்பிடத்தில் தாமதம் ஏற்படுகிறது. மொழிப்பெயர்ப்பாளர்கள் உதவி செய்த போதிலும் இத்தகைய தாமதங்களைத் தவிர்க்க இயலவில்லை எனவும் அது கூறியது.

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பல தடுப்பூசி செலுத்தும் மையங்களில் கடும் நெரிசல் நிலவுவதாக வெளிவந்த தகவல்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் சி.ஐ.டி.எஃப். இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.


Pengarang :