ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

சவூதி அரோபியா வழங்கிய மருத்துவ சாதனங்கள் மலேசியா வந்தடைந்தன

கோலாலம்பூர், ஜூலை 30- மன்னர் சல்மான் மனிதாபிமான மற்றும் நிவாரண உதவி மையத்தின் வாயிலாக மலேசியாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சாதனங்கள் இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தன.

நாடு எதிர்நோக்கும் கோவிட்-19 பெருந்தொற்றை முறியடிப்பதில் உதவும் நோக்கில் சவூதி அரேபியா இந்த உதவிப் பொருள்களை வழங்கியுள்ளது.

இந்த உதவிப் பொருள்களை ஏற்றிய இரு விமானங்கள் ரியாட், மன்னர் காலிட் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டதாக சவூதி அரேபியாவின் எஸ்.பி.ஏ. செய்தி நிறுவனம் கூறியது.

சவூதி அரசாங்கம் வழங்கிய அந்த உதவிப் பொருள்களில் 100 சுவாசக் கருவிகள், 150 நடமாடும் சுவாசக் கருவிகள், 319 ஆக்சிஜன் கவசங்கள், 30 சுவாச உபகரணங்கள், 15 மோனிட்டர்கள்,  150 மின்சார மருத்துவ கட்டில்கள், 30 லட்சம் அறுவை சிகிச்சை முகக் கவசங்கள், 10 லட்சம் என்95 முகக் கவசங்கள்,  5 லட்சம் மருத்துவ கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்களும் அடங்கும்.

இந்த உதவிப் பொருள்களை மலேசியாவுக்கான சவூதி அரேபியா   அரச தந்திரி மலேசிய அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்மாக ஒப்படைப்பார் என்று வெளியுறவு அமைச்சு  நேற்று அறிக்கை ஒன்றில் கூறியது.

சவூதி அரேபியா வழங்குவதாக வாக்குறுதியளித்த பத்து லட்சம் தடுப்பூசிகள்  மலேசிய வெளியுறவு அமைச்சிடம்  ஒப்படைக்கப்படும் என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சவூதி அரேபியா அங்கீகரித்த தடுப்பூசிகளில் ஒன்று  மலேசியாவுக்கு வழங்கப்படும் என அது கூறியது.


Pengarang :