ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிறப்பு தொலைபேசி சேவை-  சிப்பாங் நகராண்மைக் கழகம் ஏற்பாடு

ஷா ஆலம், ஜூலை 30– கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிப்பாங் நகராண்மைக் கழகம் சிறப்பு தொலைபேசி சேவையை  தொடக்கியுள்ளது.

சேவை மற்றும் புகார் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் தொலைபேசி எண் தற்போது இந்த உதவித் திட்டத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக  நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன்  கூறினார்.

சிரமத்திலிருந்து மீள்வதற்கு பொருளாதார அல்லது இதர வகைகளில் உதவி தேவைப்படும் நிலையில் பல்வேறு  தரப்பினர் உள்ளதை நாங்கள் அறிந்துள்ளோம். அவர்களின் வாழ்க்கை சுபிட்சமாக இருப்பதற்கு இத்தகைய உதவிகள் பெரிதும் துணை புரியும் என்று அவர் சொன்னார்.

இந்த தொலைபேசி சேவையின் வழி உணவு, அத்தியாவசியப் பொருள், சுகாதார உதவி மற்றும் நிதியுதவி தேவைப்படுவோருக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் வாயிலாக உதவிகளை வழங்குவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் மாதாந்திர கூட்டத்திற்காக வழங்கிய செய்தியில் அவர் இவ்வாறு கூறினார்.

தற்போது பிரதிநிதித்துவ மண்டங்களின் வாயிலாக சிப்பாங் வட்டார மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளை இந்த திட்டம் எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உதவித் தேவைப்படும் சிப்பாங் வட்டார மக்கள் 03-83190200 அல்லது 03-83190300  என்ற எண்களில் அல்லது 019-2826533 என்ற வாட்ஸ்அப் புலனம் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

வேலை நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த தொலைபேசி சேவை வழங்கப்படும். தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள விரும்புவோர் 15888 என்ற எண்களில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.


Pengarang :