ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கிள்ளான் மருத்துவமனை கூடுதல் நிபுணர்கள், உபகரணங்கள் கிடைக்கும்-சார்ல்ஸ் சந்தியாகோ நம்பிக்கை

கிள்ளான், ஜூலை 31- கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை கூடுதல்  மருத்துவ நிபுணர்களையும் ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் சாதனம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் விரைவில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை அம்மருத்துவனைக்கு மேற்கொண்ட திடீர் வருகையின் போது சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த கூடுதல் அனுகூலங்கள் கிடைப்பதற்குரிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

அம்மருத்துவமனைக்கு திடீர் வருகை புரிந்து நிலைமையை நேரில் கண்டறிந்ததற்காக அமைச்சர் அடாம் பாபாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சார்ல்ஸ், இந்த வருகையின் போது அமைச்சர் பிறப்பித்த அனைத்து உத்தவுகளும் வாக்குறுதிகளும் இரு வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இந்த வருகையின் போது அமைச்சர் இரண்டு மணி நேரத்தை மருத்துவமனையில் செலவிட்டு நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியதோடு மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளையும் நேரில் பார்வையிட்டதாக அவர் சொன்னார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் சிலர் தாங்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக உணவு இன்றி இங்கு காத்திருப்பதாக அமைச்சரிடம் கூறினர். தங்களுக்கு உணவு கிடைத்ததாக ஒரு சிலர் கூறிய போதிலும் அனைவருக்குமாக சேர்த்து 400 பொட்டலங்களை ஏற்பாடு செய்ய அவர் உத்தரவிட்டார் என சார்ல்ஸ் மேலும் தெரிவித்தார்.

இரு தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தமக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக கிள்ளான் மருத்துவமனைக்கு திடீர் வருகை புரிந்து நிலைமையை நேரில் கண்டறிந்த அமைச்சர் ஆடாம் பாபாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


Pengarang :