HEALTHMEDIA STATEMENTNATIONAL

சரவாவில் அவசரகாலம்: மாமன்னர் பிரகடனம்- மாநிலத் தேர்தல் ரத்து

கூச்சிங், ஜூலை 31- மாட்சிமை தங்கிய பேர ரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா சரவா மாநிலத்தில் அவசர காலத்தை பிரகனடம் செய்தார். இந்த அவசர காலம் ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு அம்மாநில தேர்தலை நடத்துவதை குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்தி வைக்கும் நோக்கில் இந்த அவசர காலம் பிரகடனப்படுத்தப்படுகிறது.

தேர்தல் நடக்கும் பட்சத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு மாட்சிமை தங்கிய பேரரசர் அவசர காலச்சட்டத்தை பிறப்பிப்பதாக ஜூலை 30 ஆம் தேதியிட்ட அரசாங்கப் பதிவேடு கூறியது.

சரவா மாநில அரசியலமைப்புச்  சட்டத்தின் 21(3) வது பிரிவின் இந்த அவசர காலச் சட்டம் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. சரவா மாநில அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி காலம் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதியுடன் சட்டமன்றம் கலைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட்ட அவசரகாலம் ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து அடுத்த 60 நாட்களில் சரவா மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 


Pengarang :