ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

நான்கு தொகுதிகளின் கூட்டு முயற்சியில் 4,000 பேருக்கு தடுப்பூசி

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 31– சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் நான்கு தொகுதிகளின் கூட்டு முயற்சியில் 4,000 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இங்குள்ள டிரோப்பிகானா கார்டன்ஸ் மால் தடுப்பூசி மையத்தில் நடைபெற்ற இந்த தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் பண்டார் உத்தாமா, புக்கிட் லஞ்சான், புக்கிட் காசிங், கம்போங் துங்கு ஆகிய தொகுதிகளைச் சேரந்தவர்கள் பங்கு கொண்டனர்.

அண்மையில் நடைபெற்ற முதல் கட்டத் தடுப்பூசி இயக்கத்தில் கலந்து கொள்ளத் தவறியவர்கள் மற்றும் மைசெஜாத்ரா செயலியில் பதிந்து தடுப்பூசி பெறுவதற்கு இன்னும் தேதி கிடைக்காதவர்கள்  இன்று தடுப்பூ பெற்றதாக பண்டார் உத்தாமா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

மாநிலத்திலுள்ள அனைவரும் தடுப்பூசி பெறுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

பலர் மைசெஜாத்ரா செயலியில் பதிவு செய்தும் தடுப்பூசி பெறுவதற்கான தேதி இன்னும் கிடைக்காத நிலையில் உள்ளனர். அத்தகையோரையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டியதாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாநில அரசு வழங்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விரைவாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும்படி கம்போங் துங்கு உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார்.

நோய்த் தொற்று பாதிப்பை நாடு எதிர்நோக்கியுள்ள நிலையில்  தடுப்பூசி பெறும் விவகாரத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு தங்களுக்கு மிகவும் தேவைப்படுவதால் சாக்குப் போக்கு கூறுவதை தவிர்த்து தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார். 


Pengarang :