ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மைசெஜாத்ராவில் பதிந்தவர்களுக்கும்  சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தில் தடுப்பூசி பெற வாய்ப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 31– மைசெஜாத்ரா செயலி வழி தடுப்பூசி பெறுவதற்கான தேதி கிடைத்தவர்களுக்கு சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.பி.வி. மையங்களில் தடுப்பூசி பெறுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்துவதற்காக சுகாதார அமைச்சும் மாநில அரசாங்கமும் அமல்படுத்தியுள்ள ஒத்துழைப்பின் வாயிலாக இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பி.கே.என்.எஸ். விளையாட்டு மையம் உள்பட தேர்ந்தெடுக்கப்பட்ட சில தடுப்பூசி மையங்களில்  மட்டுமே இந்த நடைமுறை அமல் செய்யப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்த ஒத்துழைப்பு எந்த பிரச்னையையும் ஏற்படுத்தவில்லை. காரணம், சிலாங்கூர் அரசிடம் போதுமான தடுப்பூசி உள்ளது, அதே சமயம் அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது பொதுவான நோக்கமாக உள்ளது என்றார் அவர்.

நேற்று முதன் முறையாக செலங்கா மற்றும் மைசெஜாத்ரா செயலி வழி பதிவு செய்தவர்களுக்கு ஒரே இடத்தில் தடுப்பூசி பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் பி.கே.என்.எஸ். விளையாட்டு மையத்தில்  கூட்ட நெரிசல் சற்று அதிகமாக காணப்பட்டது. எனினும், பணியாளர்கள் மற்றும் தொண்டூழியர்களின் துரித நடவடிக்கையினால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :