ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

97 விழுக்காட்டு கோல சிலாங்கூர் மக்கள் தடுப்பூசி பெற்றனர்- மந்திரி புசார்

கோல சிலாங்கூர், ஆக 1- சுமார் 97 விழுக்காட்டு கோல சிலாங்கூர் மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விபரம் தெரிய வந்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த தரவுகளின் அடிப்படையில் கோல சிலாங்கூரில் 223,000 பேர் தடுப்பூசிக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் 180,000 பேர் தடுப்பூசியைப் பெற்று விட்டனர். தடுப்பூசியைப் பெறுவதில் அப்பகுதி மக்கள் கொண்டுள்ள கடப்பாட்டை இது காட்டுகிறது. எஞ்சியுள்ளவர்கள் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள டேவான் பண்டார் பாருவில் நடைபெறும் புக்கிட் மெலாவத்தி தொகுதி நிலையிலான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் பணிகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிம் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்பதிவு இன்றி பொது மக்கள் நேரடியாக வந்து தடுப்பூசி பெறுவதற்கு வகை செய்யும்  இத்திட்டம் இத்தொகுதியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :