ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கிள்ளானில் தற்காலிக கள மருத்துவமனை வெள்ளிக்கிழமை செயல்படத் தொடங்கும்

ஷா ஆலம், ஆக 4- மலேசிய ஆயுதப்படையால் கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தற்காலிக கள மருத்துவமனை வரும் வெள்ளிக்கிழமை மாலை செயல்படத் தொடங்கும்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நிர்மாணிக்கப்படும் இந்த மருத்துவமனை பயன்படுத்துவதற்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்யும் பணியில் தீயணைப்புத் துறையினரும் ஆயுதப்படையினரும் தற்போது ஈடுபட்டு வருவதாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜூல்கர்னாய்ன் முகமது  ராவி கூறினார்.

இன்று பரிசோதனை நடவடிக்கைகளும் முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளை தொடங்கி வெள்ளிக் கிழமை வரை நடவடிக்கை தொடர்பான பயிற்சிகள்  நடத்தப்படும். அன்று மாலை அல்லது இரவு அந்த தற்காலிக மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

மொத்தம் 14.24 மீட்டர் நீளம் மற்றும் 30.48 மீட்டர் அகலம் கொண்ட இந்த தற்காலிக மருத்துவமனை கார் நிறுத்தும் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை அறை, கழிப்பறை, குளியலறை, தாதியர் முகப்பிடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன என்று அவர் சொன்னார்.

தற்போது இந்த மருத்துவமனையில் சுமார் ஆயிரம் கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வேளையில்  100 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதியை புதிய கள மருத்துவமனை கொண்டுள்ளது. இங்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படும்  மூன்றாம் மற்றும் நான்காம் நலை நோயாளிகள் சிகிச்சை பெறுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :