ECONOMYHEALTHNATIONALPBT

கிள்ளான் பள்ளத்தாக்கு பெருநிலப் பகுதியில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும்

கோலாலம்பூர், ஆக 5- கிள்ளான் பள்ளத்தாக்கு பெருநிலப் பகுதியில் (ஜி.கே.வி.) கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

மருத்துவமனைகளில் உள்ள இதர சேவைப் பிரிவுகளையும் நோயாளிகளுக்கான வார்டுகளாக மாற்றுவதும் இத்திட்டத்தில் அடங்கும் என்று ஜி.கே.வி. பகுதிக்கான கோவிட்-19 நடவடிக்கை பணிக்குழுவின் ஆணையர் டத்தோ டாக்டர் சோங் சீ கியோங் கூறினார்.

கிள்ளான், கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலானை உள்ளடக்கிய கிள்ளான் பள்ளத்தாக்கு பெருநிலப் பகுதியில் கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக கோவிட்-19 அல்லாத நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுவர். இதன் மூலம் அரசாங்க மருத்துவமனைகளில் அதிகமான கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

அதோடு மட்டுமின்றி, பொது தற்காப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளின் ஒத்துழைப்புடன் அம்புலன்ஸ் வாகன சேவையும் அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறி கொண்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது  மற்றும் சி.ஏ.சி. மையங்களில் கண்காணிப்பது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :