ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

கோல லங்காட் உத்தாரா வனப்பகுதி தகுதி மாற்றப் பரிந்துரை மீது ஓராண்டு காலத்திற்கு ஆய்வு

ஷா ஆலம், செப் 1- கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை தகுதி மாற்றம் செய்வது தொடர்பான பரிந்துரை மீது பொது விசாரணைக்குழு ஓராண்டிற்கும் மேல் விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையின்  போது பெறப்பட்ட அனைத்து ஆடசேபங்களும் ஒன்று திரட்டப்பட்டு மேல் நடவடிக்கைக்காக மாநில ஆட்சிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக சிலாங்கூர் வன இலாகா இயக்குநர் டத்தோ அகமது ஃபாட்சில் மஜிட் கூறினார்.

மொத்தம் 991.90 ஹெக்டர் பரப்பளவு பகுதியை உள்ளடக்கிய பரிந்துரையை கோல லங்காட் மாவட்ட நில அலுவலகம் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி பெற்றதாக அவர் சொன்னார்.

பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், பாதுகாக்கப்பட்ட நிரந்தர வனப்பகுதியை பொருளாதார நோக்கத்திற்காக  தகுதி மாற்றம் செய்ய 1985 ஆம் ஆண்டு (2011இல் திருத்தப்பட்டது) சிலாங்கூர் மாநில வனச் சட்டத்தின் 11 பிரிவு வகை செய்கிறது என்று அவர் கூறினார்.

தகுதி மாற்றம் செய்யப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் சூழியல் முறைக்கும் பரப்பளவுக்கும் இணையான அல்லது அதை விட சிறந்த நிலம் மாற்று வனப்பகுதியாக வழங்கப்பட வேண்டும் என்று அச்சட்டத்தின் 12வது பிரிவு கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீடமைப்பு உள்ளிட்ட கலவையான மேம்பாட்டுத் திட்டம் கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என்று மாநில அரசு கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி கூறியிருந்தது.

இவ்விவகாரம் தொடர்பில் தனிநபர்கள், அரசு சாரா அமைப்புகள், அரசாங்க நிறுவனங்களின் கருத்தைப் பெறுவதற்காக அதே ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி பொது சந்தப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

சவுஜானா புத்ரா, இலிட் நெடுஞ்சாலை, லாடாங் போ புக்கிட் சீடிங், கமுடா கோவ் உள்பட சுற்றுப்புறங்களில் காணப்படும் துரித வளர்ச்சி காரணமாக கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.


Pengarang :