ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பிரச்னைகள் எழுவதைத் தவிர்க்க அனுமதி பெற்று ஆலயம் கட்டுங்கள்- கணபதி ராவ் வேண்டுகோள்

ஷா ஆலம், செப் 3– வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்க விரும்பும் தரப்பினர் அதற்கான அனுமதியை ஊராட்சி மன்றங்களிடமிருந்து முறையாகப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகைய நடவடிக்கையின் வழி தேவையற்ற பிரச்னைகள் எதிர்காலத்தில் எழுவதை தவிர்க்க முடியும் என்று லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமய சிறப்பு செயல்குழுவின் இணைத் தலைவர் வீ.கணபதி ராவ் கூறினார்.

சட்டவிரோதமாக ஆலயங்கள் கட்டப்படும் பட்சத்தில் அவற்றை உடைப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இதனால் மேலும் கடுமையான சிக்கல்கள் உண்டாகும் என்று சமூக நலன், தொழிலாளர் மற்றும் பரிவுமிக்க அரசாங்கத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

ஆலயங்களை நிர்மாணிப்பதற்கு முன்னர் அதன் திட்டமிடல் தொடர்பாக விண்ணப்பம் செய்வது கட்டாய நிபந்தனையாகும் எனக் கூறிய அவர், இது நீண்டகால அடிப்படையில் உத்தரவாதம் அளிக்கக் கூடியது என்பதால் ஊராட்சி மன்றங்களின் நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

அங்கீகாரம் பெற்ற ஆலயங்களை அரசாங்க பதிவேட்டில் இடம் பெறச் செய்ய முடியும். மாநில அரசு இதுவரை சுமார் 300 ஆலயங்களை ஆர்ஜிதம் செய்துள்ளது என்று மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

ஆலயங்களை சிறிய அளவில் நிர்மாணிக்கும்படி அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்ட அவர், இதன் வழி குறைந்த செலவில் ஆலயத்தை நிர்மாணிக்க முடியும் என்பதோடு நிர்வாகச் செலவினங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

 


Pengarang :