ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

இலவச கோவிட்-19 சுயபரிசோதனை கருவிகள் இன்று முதல் விநியோகம்

பெட்டாலிங் ஜெயா, செப் 3– கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயன்தரக்கூடிய சுய பரிசோதனைக் கருவிகளை இலவசமாக வழங்கும் திட்டம் இன்று முதல் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்நோக்கத்திற்காக உமிழ்நீர் மூலம் சோதனை மேற்கொள்ளக்கூடிய 60,000 கருவிகளை மாநில அரசு தயார் செய்துள்ளதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

முதல் கட்டமாக பண்டார் உத்தாமா, தாமான் டெம்ப்ளர், கோத்தா டாமன்சாரா, சுபாங் ஜெயா, ஸ்ரீ செத்தியா ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு தலா 1,000 சுய பரிசோதனைக் கருவிகள் பகிர்ந்தளிக்கப்படுவதாக  அவர் சொன்னார்.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் தங்கள் உடல் நிலையை சுயமாக பரிசோதித்துக் கொள்வதற்கு ஏதுவாக இக்கருவிகள் வழஙகப்படுவதாக அவர் கூறினார்.

வழக்கமாக கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டால் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் அந்நோய் பரவி யாரும் வீட்டிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலைகளில் நோய்த் தொற்று உள்ளவர்களையும் இல்லாதவர்களையும் அடையாளம் காண இந்த கருவி பயன்படும் என்றார் அவர்.

இங்குள்ள பண்டார் உத்தாமா தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் சம்பந்தப்பட்ட அந்த ஐந்து தொகுதி பொறுப்பாளர்களிடம் இந்த சுய பரிசோதனை கருவிகளை ஒப்படைக்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :