ECONOMYHEALTHSELANGOR

அமோக ஆதரவின் எதிரொலி- நடமாடும் தடுப்பூசித் திட்டத்தை தொடர சிலாங்கூர் அரசு திட்டம்

ஷா ஆலம், செப் 15- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசித் திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அத்திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வதற்கு  மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் தடுப்பூசி பெற இயலாதவர்கள் மற்றும் அந்நிய நாட்டினர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநில அரசு இவ்வாரம் முழுவதும் நடமாடும் தடுப்பூசி இயக்கத்தை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக 50,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்திற்கு கிடைத்து வரும் அமோக ஆதரவை கருத்தில் கொண்டு அத்திட்டத்தை தொடர்வதற்கு நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என்றார் அவர்.

மாநில மக்கள் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்வதற்கும் நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் இந்த நடமாடும் தடுப்பூசி திட்டத்தை மாநிலத்தின் 11 தொகுதிகளில் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த தடுப்பூசி இயக்கம் ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மேற்கொள்ளப்படும்.


Pengarang :