Juwairiya Zulkifli
SELANGOR

பத்து கேவ்ஸ் ரிசர்வ் நிலத்திற்கு நாங்கள் நிலப்பட்டா வழங்கவில்லை- பக்கத்தான் அரசு திட்டவட்டம்

ஷா ஆலம், செப் 16- பத்து கேவ்ஸ் ரிசர்வ் நிலத்திற்கு நிலப்பட்டா வழங்க பக்கத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஒரு போதும் ஒப்புதல் அளிக்கவில்லை.

அந்த ரிசர்வ் நிலப்பகுதி தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் மூன்று முறை நிலத்தகுதி மாற்றம் செய்யப்பட்டதாக  சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் ஜூவாரியா ஜூல்கிப்ளி கூறினார்.

கடந்த 26-8-1954இல்  28.719 ஏக்கர் நிலம் தகுதி மாற்றம் செய்யப்பட்டது. 30-4-1959இல் 17.45 ஏக்கர் பகுதி தகுதி மாற்றத்திற்குள்ளானது. மூன்றாவது முறையாக கடந்த 3-1-2008இல் மேலும் 29.78 ஏக்கர் நிலம் தகுதி மாற்றம் செய்யப்பட்டது என்று அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

தற்போது பத்து கேவ்ஸ் ரிசர்வ் நிலத்தின்  242,326 ஏக்கர் தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக  நிலைநிறுத்தப்பட்டு வருவதாக புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினருமான அவர் விளக்கினார்.

பத்து கேவ்ஸ் ரிசர்வ் நிலத்திற்கு தனி நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டதாக கூறி ஃபிரி மலேசிய டுடே இணைய ஏடு இம்மாதம் 10 ஆம் தேதி வெளியிட்ட செய்திக்கு விளக்கமளிக்கும் விதமாக ஜூவாரியா இந்த அறிக்கையை வெளியிட்டார்.

சுமார் 329.75 ஏக்கரை உள்ளடக்கிய பத்து கேவ்ஸ் ரிசர்வ் பகுதி பொதுமக்களின் பொழுது போக்கு நடவடிக்கைகளுக்கான நிலமாக கடத்ந 1930ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி ஆர்ஜிதம் செய்யப்பட்டது.

தனிப்பட்ட நிலப்பட்டாக்களை வழங்குவதன் மூலம் அந்த பத்து கேவ்ஸ் ரிசர்வ் நிலத்திற்கான தகுதியை மாற்றுவதற்கு கடந்த 2018 மார்ச் 13 ஆம் தேதி ஆட்சிக்கு வந்த பக்கத்தான் ராக்யாட் கூட்டணியும் அதன் பின்னர் பதவியேற்ற பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியும் ஒரு போதும் அனுமதி வழங்கவில்லை என்று ஜூவாரியா சொன்னார்.


Pengarang :