ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நடமாடும் தடுப்பூசித் திட்டம் – புக்கிட் காசிங் தொகுதிக்கு 700 தடுப்பூசிகள் ஒதுக்கீடு

பெட்டாலிங் ஜெயா, செப் 20- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதிக்கு 700 தடுப்பூசிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.

அவற்றில் 300 முதலாவது டோஸ் தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி பெற்றவர்களில் பெரும்பாலோர் அந்நிய நாட்டினர் என்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜீவ் கூறினார்.

இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கம் தொடர்பில் சமூக ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்தோம். இதுதவிர சுற்றுவட்டாரத்திலுள்ள முதலாளிகளிடமும் இந்த இயக்கம் குறித்த தகவல் தொகுதி சேவை  மையம் மூலம் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.

இன்னும் தடுப்பூசி பெறாத அந்நிய நாட்டினரை ஈர்ப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் பலனாக இதுவரை 60 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள செக்சன் 17, பாசார் செந்தோசாவில் நடைபெற்ற நடமாடும் தடுப்பூசி இயக்கத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதியன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இதே இடத்தில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் நடைபெறும் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசு இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கத்தை  கடந்த 12 ஆம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.

 


Pengarang :