ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலக மக்களில் 70 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெற்றிருப்பர்

வாஷிங்டன், செப் 21- வரும் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள்ள உலக மக்களில் சுமார் 70 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றிருப்பர் என உலக வங்கி எதிர் பார்க்கிறது.

தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு நன்கொடை நாடுகள் அந்த கோவிட்-19 தடுப்பு மருந்தை விரைந்து வழங்கும் பட்சத்தில் இந்த இலக்கை அடைவது சாத்தியமாகும் என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் கூறினார்.

உலகம் முழுவதும் இவ்வாண்டு இறுதிக்குள்ள நான்கு விழுக்காட்டினரும் அடுத்தாண்டு இறுதிக்குள்ள 60 முதல் 70 விழுக்காட்டினரும் தடுப்பூசியை பெற்றிருப்பர் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.

எனினும், வரும் அக்டோபர், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளின் அடிப்படையில் இதற்கான பலனைக் காண முடியும். தேவை உள்ள நாடுகளுக்கு தடுப்பூசியை விநியோகிப்பது நமக்கு பெரிய சவாலாக உள்ளது என்றார் அவர்.

தடுப்பூசிகளை விநியோகிப்பதில் வெளிப்படைப் போக்கு இல்லாமையும் தங்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தடுப்பூசிகளை அனுப்பும்படி அதன் உற்பத்தியாளர்களை தாங்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக சொன்னார்.

நேற்று சி.என்.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டேவிட் இவ்வாறு கூறியதாக ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் கூறியது.

தடுப்பூசிப் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருக்கும் மூன்றாம் நாடுகளுக்கு அவற்றை அனுப்புவது தங்களின் தற்போதைய தலையாயப் பணியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவது தொடர்பில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்ட போதிலும் தேவை உள்ள நாடுகளுக்கு அந்த தடுப்பு மருந்துகள் கிடைப்பது மிகவும் குறைவாகவே உள்ளது என அவர் சொன்னார்.


Pengarang :